TA/Prabhupada 0035 - இந்த உடலில் இரண்டு உயிர்வாழிகள் இருக்கின்றார்கள்



Lecture on BG 2.1-11 -- Johannesburg, October 17, 1975

அப்போழுது, கிருஷ்ணர் குருவின் ஸ்தானத்தை ஏற்று போதிக்கத் தொடங்கினார். தம் உவாச ஹ்ருஷீகேஷ:. ஹ்ருஷீகேஷ..., கிருஷ்ணரின் மற்றொரு பெயர் ஹ்ருஷீகேஷ. ஹ்ருஷீகேஷ என்றால் ஹ்ருஷீக ஈஷ. ஹ்ருஷீக என்றால் புலன்கள், ஈஷ என்றால் எஜமானர். ஆகவே கிருஷ்ணர் எல்லோருடைய புலன்களுக்கும் எஜமானர் ஆவார். அது பதிமூன்றாம் அத்தியாயத்தில் விவரிக்கப்படும். அதாவது க்ஷேத்ர-க்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ-க்ஷேத்ரேஷு பாரத (பகவத் கீதை 13.3). இந்த உடலில் இரண்டு உயிர்வாழிகள் இருக்கின்றனர். ஒருவர் நாமே தான், இந்த தனிப்பட்ட ஆத்மா, மற்றொருவர் கிருஷ்ணர், பரமாத்மா. ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே அர்ஜுன திஷ்டதி (பகவத் கீதை 18.61). ஆக பரமாத்மா தான் உண்மையான உரிமையாளர். இவையைப் பயன் படுத்தக்கூடிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது, ஆக என் புலன்கள், அதாவது எனக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் புலன்கள், உண்மையில் எனக்குச் சொந்தமானதே அல்ல. நான் என் கைகளை படைக்கவில்லை. இந்த கை, இறைவனால், அதாவது கிருஷ்ணரால், ஜட இயற்கையின் மூலமாக படைக்கப்பட்டது. மற்றும் உண்பது, சேகரிப்பது, இப்படி எனக்காக பயன்படுத்திக் கொள்வதற்காக வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால் வாஸ்தவத்தில் இந்த கைகளுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. இல்லாவிட்டால், இந்த கையில் வாதம் ஏற்படும்போது, "என் கை" என உரிமை கேட்டாலும் - என்னால் அதை பயன்படுத்த முடியாது ஏனென்றால் கைக்கு வழங்கிய சக்தி உண்மையான உரிமையாளரால் பின்வாங்கப்பட்டுள்ளது. ஒரு வாடகை வீட்டில் நீங்கள் குடி இருப்பதுபோல் தான். வீட்டின் உரிமையாளர், உங்களை வெளியேற்றினால், நீங்கள் அங்கே குடி இருக்க முடியாது. அதை உங்களால் பயன் படுத்தமுடியாது. அதுபோலவே, இந்த உடலின் உண்மையான உரிமையாளரான ஹ்ருஷீகேசர் என்னை இந்த உடலில் வாழ அனுமதிக்கும் வரை இந்த உடலை நாம் பயன்படுத்த முடியும். எனவேதான் கிருஷ்ணருக்கு ஹ்ருஷீகேஷ எனப் பெயர் . மேலும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால், நாம் இந்த புலன்களை கிருஷ்ணரிடமிருந்து பெற்றதை உணர்ந்து செயல்படுவதாகும். அது கிருஷ்ணருக்கு தொண்டு செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். கிருஷ்ணருக்காக பயன் படுத்துவதற்கு பதிலாக, நாம் அதை புலன் இன்பம் அனுபவிப்பதற்காக பயன் படுத்துகின்றறோம். இதுதான் நம் வாழ்க்கையின் இழிவான நிலைமை. அதாவது நீங்கள் வாடகை கொடுக்க வேண்டிய ஒரு இடத்தில் வாழ்கிறீர்கள், ஆனால் நீங்கள் வாடகை கொடுக்காமல் - அது உங்கள் சொத்து என்று நினைத்தால் - பிறகு அங்கு பிரச்சனை ஏற்படும். அதுபோலவே, ஹ்ருஷீகேஷ என்றால் அதன் உண்மையான உரிமையாளர் கிருஷ்ணர். இந்தச் சொத்து எனக்கு வழங்கப்பட்டது. அது பகவத் கீதையில் விளக்கப்பட்டிருக்கிறது. ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா (பகவத் கீதை 18.61). யந்த்ர: இது ஒரு இயந்திரம். இந்த இயந்திரம் கிருஷ்ணரால் எனக்கு வழங்கப்பட்டது. ஏனென்றால், "எனக்கு மனித உடலைப் போல் ஒரு இயந்திரம் கிடைத்தால், பிறகு நான் இவ்வாறு அனுபவிக்கலாம்." என நான் விரும்பினேன். எனவே கிருஷ்ணரும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்: "அப்படியே ஆகட்டும்." மேலும், "மற்ற மிருகங்களின் இரத்தத்தை நேரடியாக உறுஞ்சிக் குடிக்கக் கூடிய இயந்திரம் எனக்கு கிடைத்தால் நல்லது," என நான் நினைத்தால், "சரி அப்படியே ஆகட்டும்," கிருஷ்ணர் சொல்லுவார், "புலி உடலான இயந்திரத்தை பெற்று அதை பயன்படுத்திகொள்." ஆக இப்படி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆக அவருக்கு ஹ்ருஷீகேஷ எனப் பெயர். மேலும் இதை புரிந்து கொள்ளும் பொழுது, அதாவது "நான் இந்த உடலுக்கு சொந்தக்காரன் அல்ல. கிருஷ்ணர்தான் இந்த உடலின் உரிமையாளர். புலன் இன்பத்தை அனுபவிப்பதற்காக நான் ஒரு வகையான உடலை பயன்படுத்த விரும்பினேன். அவர் அதை கொடுத்திருக்கிறார். ஆனால் எனக்கு அதில் நிறைவு இல்லை. எனவே, இந்த இயந்திரத்தை உரிமையாளருக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பதை நான் கற்றுக்கொள்வேன்," இதை பக்தி என்கிறோம். ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேச-சேவனம் பக்திர் உச்யதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170). இந்த புலன்கள் எப்போது - ஏனென்றால் புலன்களின் உரிமையாளர் கிருஷ்ணர் ஆவார் - அவர்தான் இந்த உடலுக்கு சொந்தக்காரர் - ஆக இந்த உடல் கிருஷ்ணர் சேவைக்குப் பயன் படுத்தப்படும்பொழுது, நம் வாழ்க்கை பக்குவ நிலையை அடைகிறது.