TA/Prabhupada 0102 - மனத்தின் வேகம்



Lecture on SB 5.5.1-8 -- Stockholm, September 8, 1973

இப்பபோது உங்களிடம் விமானம் இருக்கிறது. நல்லது தான். ஆனால் உங்களால் மற்ற கிரகங்களைக் கூட நெருங்க முடியவில்லையே. ஆக உங்களுக்கு ஆன்மீக கிரகத்திற்குச் செல்ல விருப்பம் இருந்தால், நீங்கள் மனதின் வேகத்திற்கு அல்லது காற்றின் வேகத்திற்கு ஈடான வேகம் கொண்ட ஒரு விமானத்தை உருவாக்க வேண்டியிருக்கும். இயற்பியலாளர்களுக்கு, காற்றின் வேகம் என்ன, ஒளியின் வேகம் என்ன, என்பதெல்லாம் தெரியும். ஆக இந்த வேகத்தைவிட அதிகமானது இந்த மனதின் வேகம். காற்றும், ஒளியும் எவ்வளவு வேகமானது என்பதை இயற்பியலாளர்கள் அறிவார்கள். மனம் என்பது அதைவிட வேகமானது. உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். இப்பொழுது நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள். உடனடியாக, ஒரு நொடியில், நீங்கள் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும், செல்லலாம். நீங்கள் உங்கள் வீட்டிற்கும் செல்லலாம். இதை எல்லாம் உங்களால் பார்க்க முடியும் - மனதால் தான் பார்க்க முடியும்; மனதின் வேகத்தால் சென்றால் பார்க்கமுடியும். ஆக ப்ரஹ்ம-சம்ஹிதா கூறுகிறது, உங்களால் மனதின் வேகம் கொண்ட ஒரு விமானத்தை உற்பத்தி செய்ய முடிந்தாலும், அல்லது அது காற்றின் வேகம் வாய்ந்ததாக இருந்தாலும் - பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யஹ - அந்த வேகத்துடன் நீங்கள் பல இலட்ச வருடங்கள் சென்றபிறகும், உங்களால் கோலோக விருந்தாவனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது. அப்படி சென்றும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம் (ப்ரஹ்ம ஸம்ஹிதா 5.34). முந்தைய ஆச்சார்யர்களும் மற்றவர்களும், விமானம் என்றால் என்ன, வேகம் என்றால் என்ன, எப்படி ஓட்டுவது, இதை எல்லாம் அறியாதவர்கள் அல்ல. ஏதோ அவர்கள் கூறிய கட்டுக்கதை என்று முட்டாள்தனமாக எண்ணாதீர்கள். இந்த விமானம் எல்லாம் ஒன்றுமில்லை, மிகவும் மோசமான தரம் வாய்ந்த விமானங்கள். அந்த காலத்தில் மிகவும் அழகான விமானங்கள் இருந்தன. மன வேகத்தில் ஓடக்கூடிய விமானம் ஒன்றை நீங்கள் உற்பத்தி செய்ய இதோ இங்கே ஒரு யோசனை இருக்கிறது. இதோ இங்கே ஒரு யோசனை இருக்கிறது - அதை செய்யுங்கள். காற்று வேகத்தில் ஓடக்கூடிய ஒரு விமானத்தை உங்களால் உற்பத்தி செய்ய முடியும். ஒளியின் வேகத்தில் பறக்கும் ஒரு விமானத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடிந்தாலும், மீயுயர்ந்த கிரகத்தை சென்றடைய நாற்பதாயிரம் வருடங்கள் எடுக்கும். அது சாத்தியமா என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமக்கு தெரிந்த வரை, ஆணி, திருகுகளில் மும்முரமாக இருப்பவர்களால், மங்கிய புத்தியுள்ளவர்களால், இது போன்ற பொருட்களை எப்படி உற்பத்தி செய்ய முடியும்? அது சாத்தியமே இல்லை. அதற்கு வேறு விதமான மூளை தேவைப்படும். யோகிகளால் அங்கு செல்லமுடியும், யோகிகளால் போக முடியும். துர்வாச முனிவரைப்போல் தான். அவர் வைகுண்ட-லோகத்திற்குச் சென்றார், மேலும் பகவான் விஷ்ணுவை வைகுண்ட-லோகத்தில் நேரில் பார்த்து, தன்னை வதம் செய்ய பின்தொடர்ந்து வரும் சக்கிரத்தை பின்வாங்கிக் கொள்ளுமாறு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவர் ஒரு வைஷ்ணவரை அவமதித்திருந்தார். அது வேறொரு கதை. இப்படியாக, வாஸ்தவத்தில் மனித வாழ்க்கையின் நோக்கம், இறைவனையும் அவருடைய சக்திகளையும் புரிந்து, நமக்கும் அவருக்கும் இடையிலுள்ள பழமையான உறவுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பது தான். அதுதான் பிரதான வேலை. ஆனால் துரதிஷ்டவசமாக, அவர்கள் தொழிற்சாலைகளில், வேறு வேலைகளில், பன்றிகளும் நாய்களும் போல் ஈடுபட்டிருக்கிறார்கள், மற்றும் அவர்களது சக்தி முழுவதும் வீணாகிவிடுகிறது. வீணாகிப் போவதுமட்டுமின்றி, அவர்களுடைய பண்பும் சீர்கெட்டு விடுகிறது. அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆக அவ்வளவு கடுமையாக உழைத்தப்பிறகு அவர்கள் கண்டிப்பாக மது அருந்துவார்கள். மதுபானம் செய்தபிறகு மாமிசம் சாப்பிட்டு தான் ஆகவேண்டும். இது இரண்டையும் செய்தால், அவர்களுக்கு உடலுறவு தேவைப்படும். இப்படியாக, அவர்கள் இருளிலேயே வைக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கு, ரிஷபதேவர், இந்த வரிகளில் எச்சரிக்கிறார். அவர் எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய பிள்ளைகளிடம் கூறுகிறார், ஆனால் நாமும் அதிலிருந்து அறிவை பெற்றுக் கொள்ளலாம். அதாவது அவர் கூறுகிறார்: நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே வித்-புஜாம் யே (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1). காமான் என்றால் வாழ்க்கையின் தேவைகள். உங்களால் உங்கள் வாழ்க்கையின் தேவைகளை சுலபமாக நிறைவேற்ற முடியும். நிலத்தை உழுவதால் உங்களுக்கு தானியங்கள் கிடைக்கும். மேலும் ஒரு பசு இருந்தால், உங்களுக்கு பால் கிடைக்கும். அவ்வளவுதான். அது போதுமானது. ஆனால் இந்த தலைவர்கள் திட்டம் போடுகிறார்கள், அதாவது அவர்கள் விவசாயத்திலேயே திருப்தி அடைந்துவிட்டால், சிறிதளவு தானியமும் பாலும் வைத்து திருப்தியாக இருந்தால், பிறகு யார் தொழிற்சாலையில் வேலை செய்வது ? ஆகையினால் அவர்கள் வரி விதிக்கிறார்கள். அதனால் உங்களால் எளிமையான வாழ்க்கையை கூட வாழ முடியாது. இதுதான் நிலைமை. நீங்கள் விரும்பினாலும் கூட, இந்த நவீன தலைவர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் உங்களை நாய்கள், பன்றிகள், கழுதைகளைப் போல் வேலை செய்ய கட்டாயப்படுத்துவார்கள். இதுதான் நிலைமை.