TA/Prabhupada 0234 - ஒரு பக்தனாவது மிக உயர்ந்த தகுதி ஆகும்



Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

நரசிம்ம தேவர், பிரகலாதரிடம் கேட்டுக்கொண்டார், "இப்போது நீ எந்த வரம் வேண்டுமானாலும் கேள்." அதற்கு பிரகலாத மகாராஜர் பதிலளித்தார், "என் நாதா! நாங்கள் பௌதிகத்தில் பற்றுள்ளவர்கள். நான் முற்றிலும் பௌதிகவாதியான ஒரு தந்தைக்குப் பிறந்தவன். பௌதிகவாதியான ஒரு தந்தைக்குப் பிறந்ததனால், நானும் ஒரு பௌதிகவாதி தான். மேலும் பரமபுருஷரான முழுமுதற் கடவுளான தாங்கள், எனக்குப் போய் ஆசி அருளுகிறீர்களே. நான் உங்களிடமிருந்து எந்த விதமான ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை நான் அறிவேன். ஆனால் அதன் பயன் என்ன? நான் எதற்காக உங்களிடம் வரம் கேட்கவேண்டும்? நான் என் தந்தையைப் பார்த்திருக்கிறேன். இந்திரர் , சந்திரர், வருணர் போன்ற தேவர்களே அவரது சிவந்த கண்களைக் கண்டு பயப்படும் அளவுக்கு அவர் பௌதிக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார். மேலும் அவர், இந்தப் பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அவர் அவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தார். மேலும் செல்வம், செழிப்பு, வலிமை, புகழ், எல்லாம் முழுமையாக இருந்தது, ஆனால் நீங்கள் ஒரு நொடியில் அதை ஒழித்துவிட்டீர்கள். ஆக, நீங்கள் ஏன் எனக்கு இப்படிப்பட்ட வரம் கேட்க சொல்கிறீர்கள்? நான் அதை வைத்து என்ன செய்வேன்? நான் உங்களிடமிருந்து ஆசியை பெற்று, அந்த அகங்காரத்தில், உங்களுக்கு விரோதமான தீய செயல்கள் அனைத்தையும் செய்தால், ஒரு வினாடியில் நீங்கள் என் அகங்காரத்தை கிழித்து விடுவீர்கள். எனவே, தயவுசெய்து இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை, பௌதிக ஐசுவரியங்களை எனக்கு வழங்காதீர்கள். அதைவிடச் சிறந்தது, உங்கள் சேவகனின் சேவையில் ஈடுபட்டு இருக்குமாறு என்னை ஆசீர்வதியுங்கள். எனக்கு இந்த ஆசீர்வாதமே வேண்டும். நான் நேரடியாக உங்கள் சேவகனாக அல்ல, உங்கள் சேவகனின் சேவையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற ஆசீர்வாதத்தை உங்களிடமிருந்து பெற வேண்டும்.” பிறகு பல பிரார்த்தனைகளை செய்தப்பின், பகவானை சமாதானப்படுத்தியப் பிறகு … அவர் மிகவும் கோபத்தில் இருந்தார். பின்னர் பகவான் கொஞ்சம் சமாதானம் ஆனப்பிறகு, பிரகலாதர் கேட்டார், "என் அன்பு நாதா, நான் இன்னொரு வரம் கேட்க விரும்புகிறேன். அதாவது என் தந்தை உங்கள் தீவிர எதிரியாக இருந்தார். அவர் மரணத்திற்கு அதுவே காரணம். இப்போது அவரை மன்னித்து, அவருக்கு முக்தி அளிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்." இது தான் வைஷ்ணவத் திருமகனின் லட்சணம். அவர் தனக்காக எதுவும் கேட்கவில்லை. மேலும் தன் தந்தை தான் மிகப் பெரிய எதிரி என்று அறிந்திருந்தும், "இந்த பாவப்பட்ட ஜென்மத்திற்கு மோட்சம் வழங்குங்கள்," என்று வரம் கேட்கிறார். ஆக பகவான் நரசிம்ம தேவர் உத்தரவாதம் வழங்கி இவ்வாறு கூறினார், "என் அருமை பிரகலாதா, உன் தந்தை மட்டுமல்ல, உன் தந்தையின் தந்தை, அவரது தந்தை என்று பதினான்கு தலைமுறைகளுக்கும் முக்தி வழங்குகிறேன். நீ இந்த குடும்பத்தில் பிறந்ததே அதற்கு காரணம்." எனவே, எவன் ஒருவன் வைஷ்ணவன் ஆகிவிட்டானோ, இறைவனின் பக்தனாகிவிட்டானோ, அவன் தன் குடும்பத்திற்கு மிகச் சிறந்த சேவையை செய்கிறான். ஏனென்றால் அவனுடைய உறவினர் என்பதால், அவன் தந்தை, தாய், யாராக இருந்தாலும் அவருக்கு முக்தி வழங்கப்படும். உதாரணத்திற்கு, இளம் வயதில், போரில் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்தை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். அதுபோலவே, ஒரு பக்தன் ஆவதே ஒருவன் அடையும் மீஉயர்ந்த தகுதி ஆகும். அவனுக்கு எல்லாமே கிடைக்கும். யத்ர யோகேஷ்வரோ ஹரிஹி யத்ர தனுர்-தரஹ பார்தஹ (பகவத் கீதை 18.78). கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ, அவர் பக்தர் எங்கு இருக்கிறாரோ, அங்கு அனைத்துப் புகழும் வந்தடையும். அது உறுதி.