TA/Prabhupada 0250 - கிருஷ்ணருக்காகச் செயல்புரியுங்கள், பகவானுக்காக செயல்புரியுங்கள், உங்கள் தனிப்பட்ட ஆ



Lecture on BG 2.6 -- London, August 6, 1973

ஆக வன்முறை என்ற இந்தப் பிரச்சனை... இந்த வன்முறை மனப்பான்மை நம் அனைவரிடமும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் அதை தடுக்க முடியாது, அதை நிறுத்த முடியாது. அதை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. மாயாவாத தத்துவவாதிகள் "இதை நிறுத்துங்கள்" என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை. உங்களால் நிறுத்த முடியாது. ஏனென்றால், நீங்கள் ஒரு உயிருள்ள ஜீவன். உங்களுக்குள் இந்த அனைத்து நாட்டங்களும் இயல்பாகவே இருக்கின்றன. உங்களால் அதை எப்படி நிறுத்த முடியும்? ஆனால் அதை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான். உங்களுக்குள் சண்டையிடும் ஊக்கம் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? ஆம். நரோத்தம தாஸ டாகூர், க்ரோத பக்த-த்வேஷி-ஜானே: அதாவது, "கடவுளின்மீது அல்லது அவரது பக்தரின்மீது பொறாமைப்படுபவர்களின் மேல் உங்கள் கோபத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று பரிந்துரைக்கிறார். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் கோபத்தை விட்டுவிட முடியாது. அதை சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் நம் வேலை. அது தான் கிருஷ்ண உணர்வு. எல்லாம் பயன்படுத்தப்பட வேண்டும். நாங்கள், "இதை நிறுத்திவிடுங்கள். அதை நிறுத்திவிடுங்கள்" என்று சொல்லவில்லை. இல்லை. நீங்கள்... கிருஷ்ணர் கூறுகிறார், யத் கரோஸி, யஜ் ஜூஹோஷி, யத் அஷ்ணாசி, யத் தபஸ்யஸி குருஷ்வ தத் மத்-அர்ப்பணம் (பகவத் கீதை 9.27). யத் கரோஸி. கிருஷ்ணர், "நீங்கள் இதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள்," என்று சொல்லவில்லை. அவர், "நீங்கள் எதைச் செய்தாலும், அதன் பலன் என்னை நோக்கி இருக்க வேண்டும்," என்கிறார். ஆக இங்கு நிலைமை என்னவென்றால், அர்ஜுனர் சுயநலம் கருதாமல் சண்டை போட தேவைப்பட்டது, ஆனால் அவரோ தனக்கு எப்படி சரி என்று படுகிறதோ அப்படி சிந்திக்கிறார். அவர் கூறுகிறார், தே அவஸ்திதஹ ப்ரமுகே தார்தராஷ்ட்ரஹ, யன் எவ ஹத்வா ந ஜிஜீவிசாமஹ : (பகவத் கீதை 2.6) . "அவர்கள் என் சகோதரர்கள், உறவினர்கள். அவர்கள் இறந்துவிட்டால்... நாங்கள் மரணம் அடைய விரும்பவில்லை. இப்போது அவர்கள் என் எதிரில் இருக்கிறார்கள். நான் அவர்களை வதம் செய்வதா?" ஆக அவர் இன்னும் தனது சுய திருப்தியின் அடிப்படையில் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு காரணத்தை உருவாக்குகிறார் - பௌதிகவாதிகள் எப்படி தன் சொந்த மன திருப்தியை அடிப்படையாக வைத்து சிந்திப்பார்களோ அப்படித்தான். ஆக அந்த மனப்பான்மையைத் தான் கைவிட வேண்டும். சுய மனநிறைவு முக்கியம் அல்ல, கிருஷ்ணரின் மனநிறைவு தான் முக்கியம். அது தான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் என்ன செய்தாலும் சரி. நீங்கள் அதை கிருஷ்ணருக்காகச் செய்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் நீங்கள் பக்குவம் அடைவீர்கள். அது மட்டுமல்ல, இந்த மனித வாழ்க்கையின் நோக்கத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவீர்கள். இந்த மனித வாழ்க்கையின் நோக்கமே அது தான். மனித பிறவிக்கு தாழ்ந்த நிலையிலுள்ள மிருக பிறவியில், அவைகளுக்கு அளிக்கப்படும் மொத்த பயிற்சியே, சுய மன திருப்தியை, சுய புலனுகர்ச்சியை சிறப்பிப்பது எப்படி என்பது தான். அவைகளுக்கு அப்படி எந்த உணர்வும் கிடையாது, அதாவது "மற்ற விலங்குகளுக்கும்..." ஏதெனும் ஒரு உணவுப் பண்டம் இருந்தால், ஒரு நாய், "நான் அதை எப்படி பெற முடியும்?" என்று மட்டுமே யோசிக்கும். மற்ற நாய்களும் அதை எப்படிப் பெற முடியும் என்று அது ஒருபோதும் யோசிப்பதில்லை. அர்ஜுனர் விஷயத்தில் அது மிருக குணம் அல்ல. மிருக குணம் என்றாலே சுயநலம், சுய திருப்தி தான் பிரதானம். "என் நண்பர், என் குடும்பத்தினர்கள்" என்ற கேள்விக்கே இடம் இல்லை. ஏன், அவை தம் சொந்த குட்டிகளோடு கூடப் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் பார்த்திருப்பீர்கள். உணவுப் பண்டம் ஏதெனும் இருந்தால், அந்த நாய் மற்றும் அதன் குட்டிகள், ஒவ்வொன்றும் சமமாக போட்டியிட்டு தன் பங்கை பெற முயற்சி செய்யும். அது தான் மிருகம். ஆக இந்த முயற்சி எப்பொழுது கிருஷ்ணரது திருப்திக்காக நடைபெறுகிறதோ, அதுதான் மனித வாழ்க்கை. மனித பிறவிக்கும் மிருக பிறவிக்கும் இதுதான் வித்தியாசம். இந்த மனப்பான்மையை அடைவதும் கடினமான காரியம் தான். எனவே பகவத் கீதையில் மக்களுக்கு போதிப்பதற்கு மொத்த கல்வியறிவும் இருக்கிறது, அதாவது, "கிருஷ்ணருக்காகச் செயல்புரியுங்கள், இறைவனுக்காகச் செயல்புரியுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை மட்டும் எண்ணாதீர்கள். பின்னர் நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள்.” யக்ஞார்தாத் கர்மணஹ அன்யத்ர லோகோ (அ)யம் கர்ம-பந்தனஹ (பகவத் கீதை 3.9). நீங்கள் எதைச் செய்தாலும், அது ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். பின்னர் நீங்கள் அந்த எதிர்வினையை இன்புற்றோ, துன்புற்றோ, அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் சரி. ஆனால் நீங்கள் கிருஷ்ணருக்காகச் செய்தால், அதன்பிறகு எந்த எதிர்வினையும் மிஞ்சாது. அது தான் உங்கள் விமோசனம். யோகஹ கர்மசு கௌசலம் (பகவத் கீதை 2.50). அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. யோகம், அதாவது நீங்கள் கிருஷ்ணரின் தொடர்பில் இருந்தால், அது தான் வெற்றியின் இரகசியம். மற்றும் இந்த பௌதிக உலகில், செய்த உழைப்பு… இல்லையெனில், நீங்கள் என்ன செய்தாலும், எந்த வேலையை செய்தாலும், அது ஏதாவது ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். பின்னர் நீங்கள் அதை இன்புற்றோ, துன்புற்றோ, அனுபவித்தே ஆக வேண்டியிருக்கும். ஆக இங்கும் அதே விஷயம் தான். அர்ஜுனர் சிந்திப்பதும் இதே அடிப்படையில் தான், ந சைதத் வித்மஹ கதரன் நோ கரியோ (பகவத் கீதை 2.6) ஆக அவர் குழம்புகிறார், "இந்த போரில் யாருக்குப் பெருமை? நான் சண்டை போடாமல் இருக்கவா, அல்லது சண்டை போடவா?" அடுத்த பதங்களில் அது தெரியவரும்... "என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது," இது போன்ற குழப்பத்தில் நீங்கள் இருக்கும்போது, சரியான திசையில் செல்ல, நீங்கள் ஆன்மீக குருவை அணுக வேண்டும். அது அடுத்த பதத்தில் விளக்கப்படும். அர்ஜுனர் சொல்வார், "எனக்குப் புரியவில்லை. நான் இப்போது குழம்பிப்போய் இருக்கிறேன். ஒரு சத்திரியனாக என்னுடைய கடமை போரிடுவது என்று தெரிந்திருந்தாலும், நான் தயங்குகிறேன். எனது கடமையில் நான் தயங்குகிறேன். ஆக நான் குழம்பிப்போய் இருக்கிறேன். எனவே கிருஷ்ணா, நான் உன்னிடம் அடிபணிகிறேன்." முன்பு அவர் ஒரு நண்பனைப்போல் பேசிக் கொண்டிருந்தார். இப்போது அவர் கிருஷ்ணரிடமிருந்து உபதேசத்தை பெற தயாராகிவிடுவார்.