TA/Prabhupada 0290 - உங்கள் காம வேட்கை நிறைவேறவில்லை என்றால், உங்களுக்கு கோபம் வரும்



Lecture -- Seattle, September 30, 1968

உபேந்திரன்: பிரபுபாதரே, கோபத்தின் குணாதிசயம் என்ன? கோபம் எவ்வாறு... பிரபுபாதர்: கோபம் என்றால் காமம். நீங்கள் காமுகனாக இருந்து, உங்கள் காமம் நிறைவடையாமல் போனால், உங்களுக்கு கோபம் வரும். அவ்வளவு தான். காமத்தின் வேறொரு தோற்றம் தான் அது. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:. ரஜோ குணத்தால், ஆசாபாசங்களால் மிகவும் வசப்பட்டிருந்தால், நீங்கள் காமம் மிக்கவர் ஆகிறீர்கள். மேலும் உங்கள் காம வேட்கை நிறைவேறாமல் போகும்பொழுது, உங்களுக்கு கோபம் வரும், அடுத்த நிலை. அதற்கு அடுத்த நிலை நினைவு நிலை இழப்பு. அடுத்த நிலை ப்ரணஷ்யதி, தன் அழிவை நோக்கி செல்கிறான். எனவே ஒருவன் இந்த காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்துவது என்றால் ஒருவன் தன்னை ஸத்வ குணத்தில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும், ரஜோ குணத்தில் அல்ல. ஜட இயற்கையின் முக்குணங்கள் உள்ளன: தமோ குணம், ரஜோ குணம் மற்றும் ஸத்வ குணம். ஆகவே ஒருவன் கடவுளின் விஞ்ஞானத்தை தெரிந்துகொள்ள விரும்பினால், அவன் தன்னை ஸத்வ குணத்தில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவனால் முடியாது. எனவேதான் நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம், "நீங்கள் இதைச் செய்யாதீர்கள், அதைச் செய்யாதீர்கள்," ஏனென்றால் அவன் தன்னை ஸத்வ குணத்தில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனால் புரிந்துகொள்ள முடியாது. கிருஷ்ண உணர்வை ரஜோ குணம் அல்லது தமோ குணத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியாது. உலகம் முழுவதும் ரஜோ குணம் மற்றும் தமோ குணத்தால் வசப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. அதாவது நீங்கள் வெறும் நான்கு கட்டுப்பாட்டுக் கொள்கைகளையும் பின்பற்றி, ஹரே கிருஷ்ண ஜெபம் செய்தால், நீங்கள் உடனேயே ஜட இயற்கையின் எல்லா குணங்களையும் கடந்து செல்வீர்கள். ஆக கோபம் என்பது ரஜோ குணத்தைச் சேர்ந்தது.