TA/Prabhupada 0392 - நாரத முனி பஜாயே வீணா பொருள்விளக்கம்



Purport to Narada Muni Bajay Vina -- Los Angeles, September 22, 1972

நாம அமனி, உதித ஹய, பகத-கீதா-ஸாமே. இது பக்திவினோத தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். இந்த பாடலின் பொருள் என்னவென்றால், கருணை மிக்க உள்ளம் கொண்ட நாரத முனிவர் தனது வீணையை வாசிக்கிறார். விணை என்பது நாரத முனிவர் வைத்திருக்கும் ஒரு நரம்பு இசைக்கருவி. அவர் அந்த வாத்தியத்தில், ராதிகா-ரமண என்று ஒலிக்கும் சுரங்களை வாசிக்கிறார். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் ராதிகா-ரமணர். அவர் வாசித்தவுடன் பக்தர்கள் எல்லாம் எதிர்பாட்டு பாடினார்கள், இந்த இணைப்பினால் ஒரு இனிமையான ஒலி ஏற்பட்டது. அமிய தாரா வரிசெ கன. வீணையுடன் இணைந்து பாடல் ஒலித்தப் பொழுது, தேன் பொழிந்தது போல் இருந்தது, மற்றும் பக்தர்கள் எல்லாம் அளவுக்கடந்த மகிழ்ச்சியில், மனம் குளிர நடனம் ஆடினார்கள். அப்படி ஆடும்போது, அவர்கள் மாதுரீ பூர என்ற மதுவை அருந்தி போதையில் இருந்ததுபோல் தோன்றியது. மது அருந்தி ஒருவர் எப்படி பித்துப்பிடிப்ததுபோல் இருப்பாரோ, அப்படியே பக்தர்கள் அனைவரும் ஆனந்தத்தில் பித்தர் ஆனார்கள். சிலர் அழுது கொண்டிருந்தார்கள், சிலர் ஆடிக் கொண்டிருந்தார்கள், மற்றும் சிலர், வெளிப்படையாக ஆட முடியாததால், தன் உள்ளத்தில் ஆடி கொண்டிருந்தார்கள். இவ்வாறு, சிவபெருமான் உடனேயே நாரத முனிவரை கட்டியணைத்து, இன்பம் பொங்கும் குரலில் அவருடன் பேசினார். சிவபெருமானை நாரத முனிவருடன் ஆடுவதைக் கண்டு, பிரம்ம தேவரும் அவர்களை சேர்ந்து, "எல்லோரும் தயவுசெய்து ஹரிபோல், ஹரிபோல்! சொல்லுங்கள்" என கேட்டுக்கொண்டார். இதைக் கண்டு, சொர்க்கலோகத்தின் மன்னரான இந்திரரும், மிகவும் திருப்தி அடைந்து, அவர்களுடன் சேர்ந்து "ஹரி ஹரி போல்." என ஆடி பாடினார். இவ்வாறு, கடவுளின் திருநாமத்தின் தைவீக ஒலி அதிர்வின் தாக்கத்தால், அனைத்து பிரம்மாண்டமும் பரவசம் அடைந்தது. மேலும் பக்திவினோத தாக்குர் கூறுகிறார், "அனைத்து பிரம்மாண்டமும் பரவசம் அடைந்தபொழுது என் ஆசை நிறைவேறியது, ஆகையால் நான் ரூப-கோஸ்வாமியின் தாமரை பாதங்களில் பணிந்து வேண்டுகிறேன், இந்த ஹரி-நாம ஜெபம் இப்படியே சிறப்பாக தொடர்ந்து நடக்கட்டும்."