TA/Prabhupada 0404 - கிருஷ்ண பக்தி எனும் வாளை ஏற்றுக்கொள்ளுங்கள் - வெறும் நம்பிக்கையுடன் கேட்க முயற்சி செய



Lecture on SB 1.2.16 -- Los Angeles, August 19, 1972

ஆக ஷீஷ்ருஷோ: ஷீஷ்ருஷோ: ஷ்ரத்ததானஸ்ய (ஸ்ரீமத் பாகவதம் 1.2.16). சிரத்தையுடன் காதுகொடுத்து கேட்பதில் ஈடுபட்டிருப்பவர்கள், ஷ்ரத்ததான... ஆதௌ ஷ்ரத்தா. நம்பிக்கை இல்லாமல் முன்னேறவே முடியாது. அது தான் ஆன்மீக வாழ்க்கைக்கு ஆரம்பம். ஆதௌ ஷ்ரத்தா. "ஆகா, இதோ..., கிருஷ்ண பக்தி நடந்துகொண்டிருக்கிறது. இது சிறப்பாக இருக்கும். இவர்கள் சிறப்பாக பிரசாரம் செய்கிறார்கள்." இன்றைக்கும் மக்கள் நம் செயல்பாடுகளை புகழ்கிறார்கள். நாம் நமது தரத்தை கடைபிடித்தால், அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆக இதற்கு தான் ஷ்ரத்தா எனப் பெயர். இந்த ஆர்வத்திற்கு தான் ஷ்ரத்தா எனப் பெயர், ஷ்ரத்ததானஸ்ய. அவன் நம்முடன் ஒன்றுசேராவிட்டாலும் சரி, ஆனால் அவன், "ஆகா, இது சிறப்பான ஒரு விஷயம், இவர்கள் நல்லவர்கள்." எனக் கூறினாலும் சரி. சிலசமயங்களில் செய்தித்தாள்களில், "இந்த ஹரே கிருஷ்ண இய்க்கத்தினர் நல்லவர்கள். இப்பேர்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கவேண்டும்." என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறு கூறுவார்கள். இவ்வாறு மெச்சுவதும், அந்த நபரை ஆன்மீகத்தில் உயர்த்தும். அவன் காதுகொடுத்து கேட்காமல் இருக்கலாம், இங்கு வராமல் இருக்கலாம் ஆனால் வெறும் "இது , சிறப்பாக இருக்கிறது. ஆம்." என கருதினால் போதும். சிறுவர்களைப் போல் தான். ஒரு சிறுவனும் ஆர்வம் காட்டுகிறான், ஜால்ராவை கையில் வைத்து வாசிக்க முயல்கிறான். மெச்சுவது. வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டுவது. "இது நன்றாக இருக்கிறது." என. அவனுக்கு புரிகிறதோ புரியவில்லையோ, கவலை இல்லை. வெறும் அப்படி மெச்சுவதே அவனுக்கு ஆன்மீக வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை தருகிறது. இது எவ்வளவு சிறப்பானது. ஷ்ரத்தா. அவர்கள் எதிர்க்காமல் வெறும் மெச்சினாலே போதும், "ஆகா, இவர்கள் சிறப்பாக செய்கிறார்கள்..." ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் என்றால் இந்த ஆர்வத்தில் வளர்ச்சி, அவ்வளவு தான். ஆனால் இந்த ஆர்வம் வெவ்வேறு அளவில் இருக்கலாம். ஆக ஷீஷருஷோ ஷ்ரத்ததானஸ்ய வாஸுதேவ-கதா-ருசி:. முன்தைய சுலோகத்தில், யத் அனுத்யாஸினா யுக்த: என்பது விளக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் எப்பொழுதும் பக்தியில் ஈடுபட்டு இருக்கவேண்டும், அந்த ஞாபகமாகவே இருக்கவேண்டும். இது தான் அந்த வாள். கிருஷ்ண பக்தி எனும் வாளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு உன்னால் விடுபட முடியும். இந்த வாளை வைத்து அந்த முடிச்சுகளை வெட்ட முடியும். அந்த வாளைப் பெறுவது எப்படி? அந்த முறை இங்கு விளக்கப்பட்டுள்ளது, அதாவது நீ வெறும் நம்பிக்கையுடன் கேட்க முயற்சி செய். உனக்கு அந்த வாள் கிடைக்கும். அவ்வளவு தான். உண்மையாகவே நமது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றாக நமக்கு அந்த வாள்கள் கிடைக்கின்றன, வெறும் கேட்பதாலேயே. நான் ந்யூ யார்கில் இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தேன். உங்களுக்கு எல்லாம் தெரியும். என்னிடம் வாள் எதுவும் இல்லை. சில மதக் கொள்கைகளின் படி, அம்மதத்தினர் ஒரு கையில் தனது மத இலக்கியத்தை வைத்து, மற்றொரு கையில் வாளை வைத்து: "இந்த மதத்தை ஏற்றுக்கொள், இல்லாவிட்டால் உன் தலையை வெட்டி விடுவேன்." இதுவும் ஒரு வகையான பிரசாரம். என்னிடமும் ஒரு வாள் இருந்தது, ஆனால் அந்த மாதிரியான வாள் அல்ல. இந்த வாள் - மக்களுக்கு காதால் கேட்பதற்கான வாய்ப்பு அளிப்பதற்கு. அவ்வளவு தான். வாஸுதேவ-கதா-ருசி. ஆக ஒரு ருசி ஏற்பட்டவுடன்... ருசி. ருசி என்றால் சுவை. "ஆகா, இதோ இங்கு கிருஷ்ணரை சம்பந்தப்பட்ட பேச்சு நடக்கிறது. என்ன சொல்கிறார் என நானும் கேட்கட்டும்." இந்த வாள் உடனேயே உங்களுக்கு கிடைக்கிறது. இந்த வாள் உங்கள் கையில் தான் உள்ளது. வாஸுதேவ-கதா-ருசி:. ஆனால் அந்த ருசி யாருக்கு கிடைக்கும்? இந்த சுவை? எப்படியென்றால், நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். இந்த கற்கண்டை போல் தான். அது இனிப்பானது என்பதை எல்லோரும் அறிவோம், ஆனால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு அதை தந்தால், அவனுக்கு அது கசக்கும். கற்கண்டு இனிப்பானது என நாம் அறிவோம், ஆனால் அந்த மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும், அந்த கற்கண்டு கசப்பாக தோன்றுகிறது. எல்லோருக்கும் தெரியும். அது உண்மை. ஆக ருசி, வாஸுதேவ-கதா, அதாவது கிருஷ்ண-கதாவை கேட்பதில் இருக்கும் சுவையை, பௌதீகம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுவைக்க முடியாது. இந்த சுவையை பெறுவதற்கு முன்னால் செய்யவேண்டிய காரியங்கள் உள்ளன. அவை என்ன? முதலில் மதித்து அதை மெச்சி பேசுவது: "ஆகா, இது நன்றாக இருக்கிறதே." ஆதௌ ஷ்ரத்தா, ஷ்ரத்ததான. ஷ்ரத்தா, அதாவது அதன் பெருமையை உணர்வது, இது தான் ஆரம்பம். பிறங ஸாது-ஸங்க (சைதன்ய சரிதாம்ருதம் 22.83). அதாவது உறவாடுதல்: "சரி, இவர்கள் கிருஷ்ணர் திருநாமத்தை ஜெபித்து, அவரை பற்றி பேசுகிறார்கள். நானும் அவர்களிடம் சென்று கேட்டு தெரிந்துக் கொள்கிறேன்." இதற்கு தான் ஸாது-ஸங்க எனப் பெயர். பக்தர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வது. இதுதான் இரண்டாம் கட்டம். மூன்றாம் கட்டத்தில் பஜன-க்ரியா. ஒருவன் நன்றாக (பக்தர்களுடன்) சகவாசம் வைத்திருந்தால், "நான் சீடன் ஆகலாமே." என்ற நினைப்பு வரும். அதன் பிறகு எங்களுக்கு மனு கிடைக்கும், "பிரபுபாதரே, தாங்கள் தயவுசெய்து என்னை தங்களது சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்." இதுவே பஜன-க்ரியாவின் ஆரம்பமாகும். பஜன-க்ரியா என்றால் பகவானின் தொண்டில் ஈடுபட்டிருப்பது. இதுதான் மூன்றாம் கட்டம்.