TA/Prabhupada 0677 – கோஸ்வாமி என்பது வம்சாவழி பெயரல்ல – அது ஒரு தகுதியாகும்



Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969

பிரபுபாதா : எனவே, யார் ஒருவன் புலன்களில் கட்டுப்பாட்டில் இருக்கிறானோ, அவனே கோ³-தா³ஸ. கோ என்றால் புலன்கள், தாசன் என்றால் சேவகன், என்று அர்த்தம். யாரொருவன், புலன்களின் எஜமானனாக இருக்கிறானோ, அவனே கோஸ்வாமி. ஸ்வாமி என்றால் எஜமானன், கோ என்றால் புலன்கள். நீங்கள் கோஸ்வாமி என்ற பட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். கோஸ்வாமி, என்ற பட்டம் ஒருவருக்கு அளிக்கப்பட்டு இருந்தால், அவர் புலன்களின் எஜமானன் என்று அர்த்தம். அவர் புலன்களின் சேவகன் அல்ல. எனவே, புலன்களின் சேவகனாக இருக்கும்வரை, ஒருவனை சுவாமி என்றோ கோஸ்வாமி என்றோ அழைக்க முடியாது. சுவாமி என்றாலும், கோஸ்வாமி என்றாலும் அர்த்தம் ஒன்றுதான், அதாவது புலன்களின் எஜமானன் என்பதாகும். எனவே, புலன்களின் எஜமானனாக இருக்காத வரைக்கும், ஒருவன் கோஸ்வாமி அல்லது ஸ்வாமி என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்வது ஏமாற்று வேலையே ஆகும். ஒருவன், புலன்களின் எஜமானனாக இருக்க வேண்டும். இது ரூப கோஸ்வாமியால் குறிப்பிடப்பட்டுள்ளது. கோஸ்வாமி, ரூப கோஸ்வாமி. அவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது அவர்கள் கோஸ்வாமியாக இல்லை. ஆனால், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் சீடர்களான பிறகு, அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட பின், ரூப கோஸ்வாமியும் சனாதன கோஸ்வாமியும், கோஸ்வாமி ஆனார்கள்.

எனவே, கோஸ்வாமி என்பது ஒரு பரம்பரை பட்டம் அல்ல. அது ஒரு தகுதியே ஆகும். ஆன்மீக குருவின் வழிகாட்டுதலில், ஒருவன், புலன்களைக் கட்டுப்படுத்துவதில் பக்குவமடைந்தான் என்றால், அவன் சுவாமி அல்லது கோஸ்வாமி என்று அழைக்கப்படலாம். எனவே ஒருவன் சுவாமி, கோஸ்வாமி ஆக வேண்டும். அதன்பிறகு, அவன் ஆன்மீக குரு ஆகலாம். சுவாமி, அதாவது புலன்களின் எஜமானனாக ஒருவன் ஆகாத வரைக்கும், ஆன்மீக குரு ஆவது என்பது போலித்தனமே ஆகும். இதுவும் ரூப கோஸ்வாமியால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கூறுகிறார் :

வாசோ வேக³ம்ʼ, க்ரோத⁴-வேக³ம்ʼ, மனஸ꞉-வேக³ம்ʼ,
ஜிஹ்வா-வேக³ம் உத³ரோ-வேக³ம்ʼ, உபஸ்த²-வேக³ம்
ஏதான் வேகா³ன் விஷஹேத தீ⁴ர꞉
ப்ருʼதி²வீம்ʼ ஸ ஶிஷ்யாத்
(உபதேசாம்ருதம் 1)

அதில் அவர் ஆறு தூண்டுதல்கள் இருப்பதாகக் கூறுகிறார். அதாவது உந்துதல்கள், வேகம். உந்துதல், வேகம், நீங்கள் புரிந்துகொள்ளலாம், இயற்கை உபாதை கழிக்க நீங்கள் உந்தப்படுவதைப் போல, நீங்கள் கழிப்பறைக்கு சென்றே ஆக வேண்டும். உங்களால் தடுக்க முடியாது. நீங்கள் சென்றே ஆக வேண்டும். அதுவே வேகம் எனப்படுகிறது, உந்துதல். எனவே ஆறு வேகங்கள், உந்துதல்கள் உள்ளன. அவை என்ன? வாசோ வேக³ம். பேச்சின் தூண்டுதல். தேவையற்ற பேச்சுக்கள், அதுவே பேச்சின் தூண்டுதல் என்று கூறப்படுகிறது. க்ரோத⁴-வேக³ம். சில சமயம், கோபத்தின் தூண்டுதல் உள்ளது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வந்தால், செய்யக் கூடாத செயல்களையும் நான் செய்து விடுகிறேன். சில சமயம், கோபத்தில், சொந்த உறவினர்களையும் கொன்று விடுவார்கள். இதுவே வேகம், உந்துதல் எனப்படும். எனவே, பேச்சின் தூண்டுதல், கோபத்தின் தூண்டுதல்... அதைப் போல மனதின் தூண்டுதல். மனம் கட்டளையிடுகிறது, "அங்கே உடனே போக வேண்டும்," உடனேயே. பேச்சின் தூண்டுதல், மனதின் தூண்டுதல், கோபத்தின் தூண்டுதல். பின், ஜிஹ்வா-வேகம். ஜிஹ்வா-வேகம் என்றால் நாக்கு. நான் சிறந்த உணவுகளை, சுவைக்க விரும்புகிறேன். இனிப்பு உருண்டைகளையோ அல்லது எனக்குப் பிடித்தமானவற்றை சுவைக்க விரும்புகிறேன். இவற்றையெல்லாம் ஒருவன் கட்டுபடுத்த வேண்டும். ஒருவன் தனது தேவையற்ற பேச்சுக்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவன் மனதை, மனதின் கட்டளைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். யோகப் பயிற்சி முறை மனதிற்காகவே. ஆனால் நமது கிருஷ்ண பக்தி பயிற்சியில்...... மனதைத் தவிர்த்துப் பல்வேறு விஷயங்களும் உள்ளன.

கோபத்தை போல, நாக்கு. அடுத்து, ஜிஹ்வா-வேகம். அதற்குப் பிறகு, நாக்கிலிருந்து கீழிறங்கி வருகிறது. உதர என்றால் வயிறு. ஏற்கனவே வயிறு நிரம்பி உள்ளது, இருந்தாலும் நான் இன்னும் அதை நிரப்ப விரும்புகிறேன். இதுவே வேகம். வயிற்றின் தூண்டுதல். நாக்கின் தூண்டுதலும் வயிற்றின் தூண்டுதலும் அதிகமாக இருக்கும்போது, அதற்குக் கீழே பாலுறுப்புகள், பாலுறுப்புகளின் தூண்டுதலும் இருக்கும். பிறகு எனக்குச் சில உடலுறவு தேவைப்படுகிறது. நான் அதிகமாக உண்டால், தேவை இல்லாமல் என்னுடைய நாக்கை உபயோகித்தால், விரும்பியதை எல்லாம் செய்ய என் மனதை அனுமதித்தால், பின் என்னால் என்னுடைய பாலுறுப்புகளையும் கட்டுப்படுத்த முடியாது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, பாலுறவின் தூண்டுதல் இருக்கும். இதுபோல, பலவகையான தூண்டுதல்கள் உள்ளன. ரூப கோஸ்வாமி கூறுவது என்னவென்றால், யாரொருவர் இந்தத் தூண்டுதல்களையெல்லாம் கட்டுப்படுத்துகிறாரோ, அவரே ஆன்மிக குரு ஆகலாம். ஆன்மிக குருவைத் தயாரிக்க முடியாது. ஒருவன் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தூண்டுதல்களை எல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். ஏதான் வேகா³ன் யோ விஷஹேத தீ⁴ர꞉ (உபதேசாம்ருதம் 1) யாரொருவர், இந்தத் தூண்டுதல்களை எல்லாம் கட்டுப்படுத்தி, ஸ்திரமாக இருக்கிறாரோ, தீர: ப்ருʼதி²வீம்ʼ ஸ ஶிஷ்யாத்: அவர் உலகம் முழுவதும் சீடர்களை ஏற்கலாம்.

எனவே, எல்லாம் பயிற்சியைப் பொறுத்தே அமைகிறது. இதுவே யோக முறை. யோகம் என்றால், முழு யோகமுறை என்பதே நமது புலன்கள், நமது மனம், நமது இது, அது, என எல்லாவற்றிற்குமான பயிற்சி தான். அதன் பிறகு, நாம் ஆத்மாவில் நிலை பெறலாம். வெறும் 15 நிமிடம் தியானம் செய்து, மீதி நாள் முழுவதும் தேவையில்லாத விஷயங்களைச் செய்துவிட்டு இதை உணர முடியும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. இதற்குப் பயிற்சி தேவை. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்புகிறீர்கள். அதை அவ்வளவு சுலபமாகச் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதற்குரிய விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள். சிறந்த விஷயங்கள் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வின் கருணையால், இந்த விலை மிகவும் எளிமை ஆக்கப்பட்டுள்ளது. ஹரே கிருஷ்ணா என்று உச்சரியுங்கள். எல்லாமே மிகவும் சுலபமாகி விடும். இந்தக் கட்டுப்படுத்துதல், யோகத்தின் பக்குவமுறை, எல்லாமே மிகவும் எளிமை ஆகிவிடும். இதுவே பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வின் கருணை. இஹா ஹைதே ஸர்வ-ஸித்³தி⁴ ஹைபே³ தோமார (சைதன்ய பாகவதம் மத்ய 23.78) இந்தத் திருநாம ஜெபத்தின் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தன்னுணர்வின் எல்லாப் பக்குவமும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதே பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் ஆசீர்வாதம். இதுவே உண்மை.

வீழ்ந்த மக்களை உடைய இந்த யுகத்திற்கு, வேறெந்த முறையும் வெற்றியைத் தராது. இது மட்டுமே வழியாகும். இது மிக எளிமையானது, நடைமுறையில் பயிற்சி செய்யக் கூடியது, பலன் அளிக்கக் கூடியது. மேலும், இதனை நீங்களே உணரலாம். ப்ரத்யக்ஷாவக³மம்ʼ த⁴ர்ம்யம் (பகவத் கீதை 9.2) பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளபடி, நடைமுறையில் இதை நீங்களே உணரலாம். மற்ற முறைகளில், உங்கள் முன்னேற்றத்தை நீங்களே உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், இந்த முறையை நீங்கள் சிறிது காலம் பயிற்சி செய்தாலும் கூட, "ஆம், நான் முன்னேற்றமடைகிறேன் " என்று நீங்களே உணர்வீர்கள். அதாவது, நீங்கள் உண்ணும்போது, உங்கள் பசியாறுதலை நீங்களே உணர்வதைப் போல. அதைப் போலவே, நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றினால், தன்னுணர்வின் விஞ்ஞானத்தில் நீங்கள் முன்னேறுவதை, நீங்களே உணர்வீர்கள்.

விஷ்ணுஜன: "மனதையும் அதன் மூலம் புலன்களையும் கட்டுப்படுத்துபவன் கோஸ்வாமி அல்லது சுவாமி என்று அழைக்கப்படுகிறான். மனதால் கட்டுப்படுத்தப்படுபவன் கோ-தாஸ (புலன்களின் தாஸன்) என்று அழைக்கப்படுகிறான். புலனின்பத்தின் தரம் கோஸ்வாமிக்குத் தெரியும். திவ்யமான புலனின்பத்தில், புலன்கள் ரிஷிகேசரின்(புலன்களின் உன்னத உரிமையாளரான கிருஷ்ணரின்) சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றன. தூய்மையாக்கப்பட்ட புலன்களின் மூலம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதே கிருஷ்ண உணர்வாகும். இதுவே புலன்களை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வழியாகும். யோகப் பயிற்சியின் உன்னத பக்குவ நிலை இதுவே, இதைவிட உயர்ந்த வேறு ஏதும் உண்டோ?