TA/Prabhupada 0024 - கிருஷ்ணர் மிகுந்த கருணை நிறைந்தவர்



Lecture on SB 3.25.26 -- Bombay, November 26, 1974

அர்ஜுனர் கிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த பொழுது - கிருஷ்ணர் பகவத்-கீதையை உபதேசித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரை நேரடியாக பார்த்து செவிகொடுப்பதும், பகவத்-கீதையைப் பார்த்து படிப்பதும் ஒன்றே தான். எந்த வித்தியாசமும் கிடையாது. சிலர் கூறுகின்றனர், "அர்ஜுனர் அதிர்ஷ்டமானவர். எனவே தான் கிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்து அறிவுரை பெற்றார்." அது சரியல்ல. கிருஷ்ணரை இப்பொழுதேகூட பார்க்கலாம், ஆனால் அதற்கு தகுந்த கண்கள் உங்களிடம் இருக்கவேண்டும். எனவே, ப்ரெமாஞ்ஜன-ச்சுரித... எனக்கூறப்படுகிறது. ப்ரேம அதாவது பக்தி, ஒரே அர்த்தம் தான். ப்ரெமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனென ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலொகையந்தி [பிரம்ம ஸம்ஹிதா 5.38]. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சம்பவத்தை நான் விவரிக்கிறேன், அதாவது தென் இந்தியாவில் ஒரு பிராம்மணர், அரங்கநாதர் கோயிலில் பகவத்-கீதையை படித்துக் கொண்டிருந்தார். அவர் எழுதப்படிக்க தெரியாதவர். அவருக்கு சமஸ்கிருதமோ வேறு எந்த மொழியோ தெரியாது, எழுத்தறிவற்றவர். அக்கம் பக்கத்தில் இருந்த மக்களுக்கு தெரியும், "இவரோ படிக்காதவர், ஆனால் பகவத்-கீதை படிக்கிறாராம்." அவர் பகவத் கீதையை திறந்து, "உஹு, உஹு" இப்படி செய்துகொண்டிருந்தார். யாரோ ஒருவர் பரிகாசம் செய்தார், "சரி, பிராம்மணரே, பகவத் கீதையை நீங்கள் எப்படி படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது, "கல்வியறிவு இல்லாததால் என்னை இவர் பரிகாசம் செய்கிறார்." இப்படியாக அன்று, எதேச்சையாக சைதன்ய மஹாபிரபுவும் அரங்கநாதர் கோயிலில் இருந்தார். "இவர் ஒரு பக்தர்" என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆக அவர் பிராம்மணரை அணுகி கேட்டார், "என் அன்புக்குரிய பிராம்மணரே, நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?" "இந்த மனிதர் பரிகாசம் செய்யவில்லை" என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அவர் சொன்னார், "ஐயா, நான் பகவத்-கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பகவத் கீதையை, படிக்க முயல்கிறேன், ஆனால் எனக்குப் படிப்பறிவு கிடையாது. என் குரு மஹாராஜர், "நீ கண்டிப்பாக தினமும் பதினெட்டு அத்தியாயங்களையும் படிக்க வேண்டும்" என கூறியிருக்கிறார். ஆனால் எனக்கு கல்வி அறிவு இல்லை. என்னால் படிக்க முடியவில்லை. இருப்பினும், குரு மஹாராஜர் சொன்னதனால் நான் அவருடைய கட்டளையை நிறைவேற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். எனக்கு இதை படிக்கத் தெரியாது." சைதன்ய மஹாபிரபு சொன்னார், "நீங்கள் சில சமயங்களில் அழுவதை நான் பார்க்கிறேன்." அதற்கு, "ஆம், நான் அழுகிறேன்." "உங்களால் படிக்க முடியாத பொழுது எப்படி நீங்கள் அழுகிறீர்கள்?" "இல்லை, ஏனென்றால், நான் இந்த பகவத்-கீதை புத்தகத்தை கையில் எடுக்கும் பொழுது எனக்கு ஒரு படம் தெரிகிறது. அதில் கிருஷ்ணர் கருணை மிக்கவராக தென்படுகிறார். ஏனெனில் அவர் ஒரு தேரோட்டியாக, அர்ஜுனனின் சாரதியாக இருக்கிறார். அர்ஜுனர் அவருடைய பக்தர். ஆகவே கிருஷ்ணரின் கருணையோ கருணை, அவர் ஒரு சேவகனின் ஸ்தானத்தை கூட ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார். எப்படியென்றால், அர்ஜுனர் ஆணை இடுகிறார், 'என் தேரை இங்கே நிறுத்துங்கள்,' மற்றும் கிருஷ்ணரும் அவருக்கு பணி புரிந்தார். ஆக கிருஷ்ணர் எவ்வளவு கருணை உள்ளவர். எனவே தான் இந்த படத்தை என் சிந்தையில் நினைத்துப் பார்க்கும்பொழுது, நான் அழுகின்றேன்." அதை கேட்டவுடன் சைதன்ய மஹாபிரபு அவரைக் கட்டி அணைத்தார், அதாவது "நீங்கள் பகவத்-கீதையை படித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். படிப்பறிவு எதுவும் இல்லாமலேயே நீங்கள் பகவத்-கீதையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்." அவர் அவரை கட்டி அணைத்தார். ஆக இதுதான்... அவர் எப்படி அந்த படத்தை பார்த்தார் ? அவர் கிருஷ்ணரை நேசித்ததால், ஸ்லோகங்களை அவரால் படிக்க முடிந்ததா இல்லையா என்பது ஒரு விஷயமே இல்லை. ஆனால் அவர் கிருஷ்ணரின் அன்பில் மூழ்கி அதை பார்த்துக்கொண்டிருந்தார், கிருஷ்ணர் அங்கே உட்கார்ந்திருக்கிறார், மற்றும் அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதுதான் தேவை.