TA/Prabhupada 0215 - நீங்கள் படிக்க வேண்டும். பிறகு புரிந்து கொள்வீர்கள்



Interview with Newsweek -- July 14, 1976, New York

பேட்டியாளர்: உங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா, அதாவது இளமையில் உங்கள் ஈடுபாடுகள் எவை, மற்றும்... பிரபுபாதர்: நான் ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்? பேட்டியாளர்: மன்னிக்கவும்? பிரபுபாதர்: நான் ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்? பேட்டியாளர்: நீங்கள் விருப்பப்பட்டால் சொல்லுங்கள். பிரபுபாதர்: நான் ஏன் விருப்பப்பட வேண்டும்? பேட்டியாளர்: அதாவது, பேட்டியாளர்கள் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டு தான் ஆக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் எங்களுக்கு வேலையே இருக்காது. ஹரி-ஷௌரி: பிரபுபாதர் எங்கள் இயக்கத்தைப் பற்றி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கிறார்... ராமேஷ்வரன்: மக்கள், உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள், ஸ்ரீல பிரபுபாதரே. அவர்கள் உங்கள் மீது ஆர்வம் கொண்டால், பிறகு தானாகவே உங்கள் புத்தகங்கள் மீதும் ஆர்வம் கொள்வார்கள். நாங்கள் விற்பனை செய்யும் இந்த நூல்களின் ஆசிரியரைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள். பிரபுபாதர்: நாம் புத்தகங்களை பற்றி பேசுவோம். அதற்கு நூலாசிரியரின் கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வது அவசியமா? பேட்டியாளர்: எனக்குத் தெரிந்த வரை நீங்கள் பல புத்தகங்களின் மொழிபெயர்ப்பாளர். பிரபுபாதர்: ஆம். நான் எப்படி மொழிபெயர்த்துள்ளேன் என்பதை அந்த புத்தகமே பேசும். பேட்டியாளர்: ஓஹோ. நான் நினைத்தது என்னவென்றால்... பிரபுபாதர்: நீங்கள் இந்த புத்தகங்களைப் படியுங்கள், பிறகு உங்களுக்குப் புரியும். என்னிடம் கேட்பதற்கு பதிலாக இந்த புத்தகங்களைப் படித்தால் உங்களுக்கு நல்லது. அதுதான் உண்மையான புரிதல். பேட்டியாளர்(பக்தரிடம்): இவருக்கு எப்படி இதில் ஈடுபாடு ஏற்பட்டது, மற்றும் ஆன்மீகத்தில் இந்த உணர்வை அவர் எப்படி அடைந்தார் என்பதை விளக்குங்கள். ராமேஷ்வரன்: ஓஹோ. இவர், உங்களுக்கும் உங்கள் குருவுக்கும் இடையிலுள்ள உறவு எப்படி ஏற்பட்டது, கிருஷ்ண பக்தி இயக்கத்தை அமைத்து பல புத்தகங்களை எழுத உங்களுக்கு எங்கிருந்து ஊக்கம் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறார். பிரபுபாதர்: இந்த விஷயங்களுக்கு உங்களாலேயே பதில் கொடுக்க முடியும். இதை தெரிந்துகொள்வதால் பொதுமக்கள் அவ்வளவு பயனடைமாட்டார்கள். ராமேஷ்வரன்: பொது மக்கள் என்றுமே ஒரு இயக்கத்தின் அமைப்புக்கு பின்னால் காரணமாக இருந்தவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். பெண் விருந்தினர்: ஆம், இது உதவியாக இருக்கும். மக்கள் ஆர்வமாக உள்ளனர். மக்கள் உங்களை போன்ற மனிதர்களின் வளர்ச்சியைப் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். அதை மனதில் வைத்து தான், தங்கள் எழுத்தை படிக்க அவர்கள் முடிவு செய்வார்கள். பிரபுபாதர்: எங்கள் புத்தகங்களின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எங்கள் புத்தகங்களை படியுங்கள். நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். பேட்டியாளர்: உங்களை புரிந்துகொள்ள முடியுமா? பிரபுபாதர்: ஆமாம். பேட்டியாளர்: நீங்கள் சொல்ல வருவது அதுவா? பிரபுபாதர்: ஆமாம். பேட்டியாளர்(பக்தரிடம்): அவர் சொல்ல வருவது அதுவா? பிரபுபாதர்: ஒரு மனிதனை அவன் பேச்சை வைத்து எடை போட முடியும். அவன் பேசும் போது. தாவச் ச ஷோபதே மூர்கோ யாவத் கிஞ்சின் ந பாஸதே: "ஒரு முட்டாள், பேசாத வரை நன்றாகத்தான் தெரிவான்." அவன் பேச ஆரம்பித்தால், அவன் யார் என்று உங்களுக்குப் புரியும். ஆக, என் பேச்சு புத்தகங்களில் இருக்கிறது, நீங்கள் புத்திசாலியாக இருந்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்கத் தேவையே இல்லை. ஒரு பெரிய வழக்கறிஞரின் திறமையை, அவர் நீதி மன்றத்தில் பேசும்போது தான் நாம் கணக்கிட வேண்டும். இல்லாவிட்டால் எல்லாருமே திறமையானவர்களாகத் தான் தெரிவார்கள். அவர் நீதி மன்றத்தில் பேசுவதிலிருந்து அவர் திறமையானவரா இல்லையா என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே நீங்கள் புத்தகங்களில் உள்ளதை கேட்க வேண்டும். படிக்க வேண்டும். பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உண்மையான புரிதல் அங்கு தான் இருக்கிறது.